×

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒழிக்க திட்டமா?..10 ஆண்டுகளாக துரோகம்


கிழக்கிந்திய கம்பெனி பிளாசி யுத்தத்திற்குப் பிறகு இந்தியத் துணை கண்டத்தில் தனது வாணிப வேட்டையை துவங்கியது. 1858ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவை தனது சுரண்டலுக்கான தளமாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மாற்றிக்கொண்டது. இந்திய செல்வ வளங்களை சுரண்டிக் கொழுக்க, தொழில்துறையை விஸ்தரிக்க நாடெங்கிலும் போக்குவரத்து வழித்தடங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள். முதன் முதலில் மும்பையில் துவங்கப்பட்ட ரயில் போக்குவரத்தை இந்திய துணைக் கண்டம் முழுவதும் விரிவுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. 1901ம் ஆண்டு ரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது.

எந்த முதலீடும் செய்யாமல் மக்களுடைய பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ரயில்வே வழித்தடங்களை முதலாளித்துவ கும்பல் பயன்படுத்திக்கொண்டது. இந்திய ரயில்வே வழித்தடம் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுடைய உதிரத்தாலும் உழைப்பாலும் உருவாக்கப்பட்டது. காடுகளை அழித்து, மலைகளைக் குடைந்து மேடு பள்ளங்களை சீர்செய்து கடும் பனி, வெயிலுக்கு மத்தியிலும் கணக்கிலடங்கா கொடுமைக்கு இலக்காகி, பல்வேறு கொள்ளை நோய்களுக்கு உள்ளாகி, கை கால்கள் இழந்து, உயிரிழந்து, ரத்தம் சிந்தி 63,140 கிலோமீட்டர் தூர இந்திய ரயில் போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கிய தொழிலாளி வர்க்கம் தான் தற்போதும் இந்திய ரயில்வேயை அதிகம் பயன்படுத்தி வருகிறது.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய அரசுத் துறை நிறுவனம். ஆண்டுக்கு தோராயமாக 500 கோடி மக்கள் ரயில் போக்குவரத்தில் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 35 கோடி டன் ரயில்வே மூலமாக சரக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது. 16 லட்சம் பணியாளர்கள் ரயில்வே துறையில் பணிபுரிகின்றனர். சாதாரண நாட்களில் நாள்தோறும் 14 ஆயிரத்து 444 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வேயில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதிநவீன ரயில்கள் பெருகி வருகின்றன. மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள், மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், மணிக்கு 135 கிமீ வேகத்தில் செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ், மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் கரீப் ரத் எக்ஸ்பிரஸ்கள் என பல வடிவங்களில் இந்தியன் ரயில்வே ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் 760 கிமீ தூரம் கொண்ட புதுடெல்லி – வாரணாசி வழித்தடத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 8 மணி நேரத்தில் 760 கிலோ மீட்டரை கடக்கும் இந்த ரயிலின் சராசரி வேகம் 95 கிமீ ஆகும். 2வது ரயில் புதுடெல்லியிலிருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவா தேவி கத்ரா இடையே அதே ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னை சென்ட்ரல் – கோவை இடையே இயக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் 26வது வந்தே பாரத் ரயிலாக நெல்லை – சென்னை இடையே புதிய ரயில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி இயக்கப்பட்டது.

அதே நாளில் சென்னை – விஜயவாடா உள்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தானியங்கி கதவுகள், தீத்தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமராக்கள், சென்சாரில் இயங்கும் நீர் குழாய்கள், அகலமான ஜன்னல் கண்ணாடிகள், விமானத்தில் இருப்பதைப்போல பயணிகளின் உடமைகளை வைப்பதற்கு ரேக்குகள் ஆகியவை வந்தே பாரத் மீது பிரமாண்டத்தை உருவாக்குகிறது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களில் வைபை வசதி, குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தும் உறிஞ்சு கழிவறைகள், பரவலான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள், ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம், விபத்து தடுப்பு கருவிகள் என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

பயணிகளின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில்களை போல, ரயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிக்கலின்றி பயணிக்கும் வகையில் இந்த ரயிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலின் இரண்டு பக்கங்களிலும் காற்றை கிழித்து செல்லும் வகையில் விமானத்தை போன்ற வடிவமைப்பு காணப்படுகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான எல்எச்பி பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இன்ஜின்கள் இல்லாமல் மோட்டாரில் இயங்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு பெட்டி விட்டு அடுத்த பெட்டிகளின் அடியில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

வந்தே பாரத் என்னதான் இந்தியாவிற்கு வரமாக பார்க்கப்பட்டாலும், அந்த ரயில்கள் வந்த பிறகு பயணிகள் ரயிலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விட்டது. இந்தியா ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் சார்ந்திருக்கும் நாடாக இருப்பதால், இங்கு பயண கட்டணம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லையில் இருந்து சென்னை செல்லும் முன்பதிவு கட்டணம் சாதாரண ரயில்களில ரூ.360 முதல் ரூ.390 என இருக்க, வந்தே பாரத் கட்டணம் ரூ.1620 ஆக உள்ளது. குறிப்பாக 4 மடங்கு அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒன்றிய அரசு சமீபகாலமாக மற்ற ரயில்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வந்தே பாரத் ரயிலை மட்டுமே மக்கள் மத்தியில் பேசுபொருளாக காட்டிக் கொள்கிறது.

சாமானியர்களும் அதில் ஒரு நாளாவது பயணித்திட வேண்டும் என்ற ஆவலை உருவாக்குகிறது. இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் சாலை போக்குவரத்து சரிப்பட்டு வராது. விமானத்தில் பயணிக்க ஏழை, நடுத்தர மக்களிடம் வசதிகள் இருக்காது. எனவே அவர்கள் அனைவரும் தொலைதூரம் பயணிக்க ரயில்களை மட்டுமே நம்புகின்றனர். அந்த ரயில் போக்குவரத்திலும் வேகம், நவீனம் எனக்கூறி அதிக கட்டணங்களை கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் சாமானியர்களுக்கு தொலை தூர பயணங்கள் கூட இனிமேல் இனிக்காது.

ஒரே சமயத்தில் 9 வந்தே பாரத் ரயில்களை அறிவித்து தொடங்கி வைக்கும் ஒன்றிய அரசு, அதேபோல் ஒரே சமயத்தில் 9 அந்தியோதயா ரயில்களையும், நாடு முழுவதும் அறிவித்து இயக்கினால், அதன் சேவைகளை பாராட்டலாம். ஆனால் அதை பற்றி ஒன்றிய அரசு ஒருபோதும் சிந்திப்பதில்லை. வந்தே பாரத் ரயில்களை வேகமாக இயக்குகிறோம் என்ற போர்வையில் இப்போது, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற மற்ற ரயில்களின் வேகங்களையும் குறைக்க ரயில்வே துறை முற்படுகிறது. தமிழகத்திலேயே அதற்கு உதாரணங்கள் உள்ளன. நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னைக்கு பிற்பகல் 1.50 மணிக்கு போய் சேருகிறது.

இந்த ரயில் வேகமாக செல்கிறது என்பதை நிலைநிறுத்த, தற்போது வைகை எக்ஸ்பிரசை நட்டாற்றில் விட்டுவிட்டனர். வைகை எக்ஸ்பிரஸ் மதுரையில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு சென்னை எழும்பூர் போய் சேர்ந்தது. வந்தே பாரத் எக்ஸ்பிரசிற்காக வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் ஓரம் கட்டப்படுகிறது. காரணம் இன்றி வைகையின் பயண நேரம் தற்போது அரை மணி நேரம் கூடியுள்ளது. மதுரை – சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ரயில் சேவையாக உள்ளது.

46 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்படும் (12636) வைகை விரைவு ரயில் இனி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.40 மணிக்கே மதுரையிலிருந்து புறப்படுகிறது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மதுரை – கோவை இடையிலான (16722) கோவை விரைவு ரயில் காலை 7.25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 25 நிமிடங்கள் முன்பாக காலை 7.00 மணிக்கே புறப்பட்டுச் செல்கிறது.

செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 9.55 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு 10 நிமிடம் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும். மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20க்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும். மதுரை – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து அதிகாலை 4.05க்கு பதிலாக அதிகாலை 3.35க்கு 30 நிமிடம் முன்னதாக புறப்படும்.

இந்த கால அட்டவணை மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது. இதேபோல் சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 10 நிமிடங்களில் முன்பு சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் புறப்படுகிறது. 10 நிமிட இடைவெளியில் எதற்கு இதை இயக்க வேண்டும் என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுப்பப்பட்டுள்ளது. சில நேரங்களில் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் நிரம்ப வேண்டும் என்பதற்காக சதாப்தி டிக்கெட்டுகளை முடக்குவதாக குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

வந்தே பாரத் ரயிலின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மற்ற ரயில்கள் பலிகடா ஆகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வந்தே பாரத் குறைந்த நேரத்தில் இயக்கப்படுகிறது என்பதை மக்கள் மத்தியில் எப்படியாவது நம்ப வைக்க, ஏற்கனவே வேகமாக சென்று கொண்டிருந்த ரயில்களின் பயண நேரத்தை இப்போது கூடுதலாக்கி வருகின்றனர்.

வந்தே பாரத் ரயிலை ஒரு அபரிமித வளர்ச்சியின் அடையாளமாக காட்டும் ஒன்றிய அரசு, ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையான ரயில்களை இயக்குவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் குறைப்பு மற்றும் வந்தே பாரத் ரயில்களுக்கான முக்கியத்துவத்தால் தமிழ்நாட்டில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒழிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. தனியார்மயம், நவீன தொழில்நுட்பம் மிக்க ரயில்களை இயக்குகிறோம் என்ற பெயரில் பெருநகரங்கள் அனைத்திலும் வந்தே பாரத் ரயில்களை கொண்டு வந்து ஒன்றிய அரசு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வேலைகளை அப்பட்டமாகவே இப்போது மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

* பாஜ தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பிபேக் தேப்ராய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ரயில்வே துறையை முற்றிலும் தனியார்மயமாக்கும் பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.

* அதிக வருவாய் ஈட்டித் தரும் வழித்தடங்களை தனியாருக்கு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும் தங்க நாற்கர பாதை எனப்படும் சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை ஆகிய வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் ரயில் போக்குவரத்தை நடத்த உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* வருவாய் குறைந்த வழித்தடங்களை தனியார்கள் ஏற்கமாட்டார்கள் என்பது சாமானியருக்கு கூட தெரியும் நிலையில் 151 ரயில்களை 109 வழித் தடங்களில் தனியார் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 35 ஆண்டுகளுக்கு தங்கள் விருப்பப்படி ரயில் கட்டணத்தை தனியார்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

* 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையை நவீனப்படுத்த கிட்டதட்ட 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் ரயில்வேத்துறை ஒதுக்கீட்டில் இந்த அளவு நிதி கிடைக்காது. இதனால் விரைவாக பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும், ரயில்வேத்துறையை நவீனமாக்கவுமே பொதுத்துறை -தனியார்துறை கூட்டு பங்களிப்பை ஏற்படுத்த முயற்சி செய்வதாக ரயில்வே கூறுகிறது.

* 180 கி.மீ வேகம் போகும்… ஆனா 130 கி.மீ வேகம் தாண்டல…
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரம் குறைவு என்பதை ஒன்றிய அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து கட்டமைக்க முயல்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை. ஆனால் இப்போது இருக்கும் ரயில் பாதைகளில் 130 கிமீ வேகம் தாண்டி அவற்றால் பயணிக்க முடியாது. இரட்டை ரயில்பாதைகளின் தரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே, வந்தே பாரத் எக்ஸ்பிரசால் வேகமாக பயணிக்க இயலும்.

பெட்டிகளை குறைப்பதோடு, நிறுத்தங்களையும் குறைத்தால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்களை கூட அதே வேகத்தில் சென்னை வரை வேகமாக இயக்கலாம். வந்தே பாரத் அல்லது தேஜஸ் உள்ளிட்ட அதிநவீன விரைவு வண்டிகள் நெல்லையில் இருந்து சென்னைக்கு 6 மணி நேரத்தில் இயக்கப்பட்டால் மட்டுமே, பயண நேரம் குறைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

The post ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒழிக்க திட்டமா?..10 ஆண்டுகளாக துரோகம் appeared first on Dinakaran.

Tags : Union government ,East India Company ,Indian ,Battle of Plassey ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...